Saturday, 23 March 2013

பின்னணி பாடகர்களுக்கு மரியாதை கிடைக்கச் செய்த டி.எம்.எஸ்.

மார்ச் 24 - டி.எம். சவுந்தரராஜன் பிறந்த நாள்

உலகத்தில் உள்ள தமிழ் மக்களிடையே, "டி.எம்.எஸ்.,' என்றால் அறியாதவர் இருக்க முடியாது. இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல், உணர்ச்சிப்பூர்வமாக பாடுவது ஆகியவை, டி.எம்.சவுந்திரராஜனின் தனிச் சிறப்பு. தமிழ் சினிமா இசை உலகில், நீண்ட காலம், இவர் இருந்த இடத்தை இன்னும் யாராலும் பிடிக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இவரது பழைய பாடல்களின் சிறப்புக்கு காரணம் கேட்டதற்கு, "சிறந்த கவிஞர்கள், காலத்தால் அழியாத தத்துவங்களோடு எழுதிய வரிகள், அதற்கு உயிரோட்டமான மெட்டமைத்து கொடுத்த இசை அமைப்பாளர்கள் துணையுடனும், கதாபாத்திரங்களின் நல்ல நடிப்போடும் ஒட்டி வந்ததால், நான் பாடிய பாடல்கள் இன்றும் மக்களால் நேசிக்கப்படுகிறது...' என்று அடக்கத்துடன் கூறுகிறார் டி.எம்.எஸ்.,
தற்சமயம், 91வது பிறந்த நாள் கொண்டாடும் இவர், இப்போது திரைப்படங் களில் பாடாவிட்டாலும், இவர் பாடிய பழைய பாடல்கள், வானொலி, தொலைக்காட்சி மூலம், தினசரி செவிகளில் ஒலிக்காத நாளில்லை. பிரபலமான கலைஞர்களை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், அவர்களுக்கு மேடையில் பொன்னாடை அணிவித்து, ஷீல்டு கொடுப்பது வாடிக்கை. ஒவ்வொரு பிரபலங்கள் வீட்டிலும், ஷீல்டுகள் நிரம்பியிருக்கும். அதே போன்று, டி.எம்.எஸ்., வீட்டிலும் ஏராளமான ஷீல்டுகள் உள்ளன. ஷீல்டு என்றதும், ஒரு பிளாஷ்பேக் நினைவை டி.எம்.எஸ்., கூறினார்:
கடந்த 1959ல், சிவாஜி கணேசன் நடித்த, "பாகப்பிரிவினை' படம் 100 நாள் ஓடியது. அதைக் கொண்டாட, தயாரிப்பாளர் வேலுமணி ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார். அந்த படத்தில் இவர் பாடிய, "ஏன் பிறந்தாய் மகனே...' என்ற பாடல், மிகவும் பிரபலமானது. பின்னணி பாடிய இவருக்கும் அழைப்பு.
அன்று மாலை பட்டு வேஷ்டி, ஜிப்பா அணிந்து, விசிறி மடிப்பு அங்க வஸ்திரம் தோளில் புரள, வைர மோதிரங்கள் விரல்களில் மின்ன, அத்தர் வாசனையுடன் விழாவிற்கு சென்றார் டி.எம்.எஸ்., மாலை மரியாதைகளுக் கிடையே, அரசியல் பிரமுகர்களும் திரை உலக பிரபலங்களும் பேசினர். நடிகர்களும், மற்றவர்களும் பரிசுகளை பெற்றுக் கொண்டனர். காத்திருந்து பார்த்தார் டி.எம்.எஸ்., இவருக்கோ, மற்ற பின்னணி பாடகர், பாடகியருக்கோ எந்த பரிசும் இல்லை. நிகழ்ச்சி முடிந்து வந்த அன்றிரவு, தூங்கவில்லை.
மறுநாளே, விழா ஏற்பாடு செய்த பாகப்பிரிவினை தயாரிப்பாளர் வேலுமணியிடம், "ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்கள் எவ்வளவு முக்கியமானது என்பது நீங்கள் அறியாததல்ல. இதில் உள்ள பாட்டுகளை நீக்கிவிட்டு, படத்தை ஓட்டிப்பாருங்க... அதோட முக்கியத்துவம் தெரியும். அப்படி இருக்கும்போது, பின்னணி பாடியவர்களுக்கு பரிசு கொடுக்கும் எண்ணம் வரவில்லையே...' என்று, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் டி.எம்.எஸ்.,
தாராள மனமும், கலைஞர்களிடம் நட்பும் கொண்டவர் தயாரிப்பாளர் வேலுமணி. அவர், டி.எம்.எஸ்.,சின் வருத்தத்தை புரிந்து கொண்டார். அடுத்த படத்திலிருந்து பின்னணி பாடுபவர்களுக்கும் விருதுகள் வழங்குவோம் என்று அறிவித்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு பட விழாவிலும், டி.எம்.எஸ்., மட்டுமின்றி, அவரது முயற்சியால், மற்ற பின்னணி பாடகர்களும் ஷீல்டு கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.
எந்த பின்னணி பாடகருக்கும் இல்லாத வகையில், டி.எம்.எஸ்.,சுக்கு இன்றும் ரசிகர் மன்றம் உள்ளது. ரசிகர்கள் என்று சொல்லாமல், "டி.எம்.எஸ்., பக்தர்கள்' என்று கூறிக் கொள்வர். அதில், பெரும்பாலும் இளைஞர்கள் உள்ளது தான் ஆச்சரியம். ஒவ்வொரு ஆண்டும், டி.எம்.எஸ்., பிறந்த நாள் விழாவில், சாலமன் பாப்பையா, லியோனி குழுவினரின், "பாட்டு பட்டி மன்றம்' நடத்தி, வசதி அற்றவர்களுக்கு தேவையான உதவிகள் புரிகின்றனர். இந்த ஆண்டும், தன் பக்தர்கள் மத்தியில், 91வது பிறந்த நாள் கொண்டாடும் டி.எம்.எஸ்.,சுக்கு நாமும் வாழ்த்துக் கூறுவோம். 
***

டி.எம்.எஸ்., தான், மாணவ பருவத்தில் பட்ட கஷ்டத்தை நினைத்து, திரை உலகில் பிரபலமானவுடன், காலமான தன் மகன் பெயரில், ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவிகளை இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறார்.
***

மதுரையில், அரசமரம் இசை, இலக்கிய விழாவில், டி.எம்.எஸ்., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய அப்போதைய அமைச்சர் காளிமுத்து, டி.எம்.எஸ்., பாடல் பற்றி இப்படி கூறினார்:
சிங்கத்தின் முழக்கம்
சிறுத்தையின் பாய்ச்சல்
வேங்கையின் கம்பீரம்
புலியின் வேகம்
மின்னலின் வீச்சு
அருவியின் ஓட்டம்
தென்றலின் தெம்மாங்கு
நிலவின் குளிர்ச்சி...
ஆகிய அவ்வளவும் அடங்கியிருக்கும் குரல்தான் டி.எம்.எஸ்.,சின் சங்கீத மணிக்குரல், அவர் வீரப்பாட்டு பாடினால் கோழைக்கும் வீரம் வரும். சோகப்பாட்டு பாடினால் கல்மனம் கொண்டவருக்கும் கண்ணீர் வரும். காதல்பாட்டு பாடினாலோ சந்நியாசிக்கும் காதல் வரும் என்று, கூறியதும், அந்த பகுதியே கை தட்டலால் அதிர்ந்தது.
***

வாரமலர் பகுதி(இது உங்கள் இடம்)


மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டா....





திருமணமான புதிதில், என் இஷ்டப்படி நினைத்ததை வாங்குவதும், செய்வதுமாக இருந்தேன். இதனால், மனைவிக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டு, சண்டையில் முடியும். உடனே, தாய் வீடு சென்று விடுவாள் மனைவி. இரண்டு மாதத்திற்கு ஓட்டல் சாப்பாடுதான். பிறகு, பெரியவர்கள் சமாதானம் பேசி, சேர்த்து வைப்பது வழக்கம். 
இப்படியே ஓடியது என் வாழ்க்கை. எனக்கும் சலிப்பு ஏற்படவே, சண்டைக்கான காரணத்தை யோசிக்க ஆரம்பித்தேன். "இனி, எதை செய்தாலும், நம் இஷ்டப்படி செய்யாமல், மனைவியின் ஆலோசனைப்படி செய்வதே சரி...' என முடிவுக்கு வந்தேன். அதிலிருந்து, நண்பர்கள் ஏதாவது சொன்னால் கூட, "என் மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்...' என்பேன்.
நண்பர்களோ, "பொண்டாட்டி தாசன் ஆகி விட்டாயா?' என்று கேலி செய்வர். "நம்ப லைப் பார்ட்னர் ஆச்சே... பார்ட்னர் கிட்ட கேட்காமல் செய்வது தப்பில்லையா?' என்று சொல்லி சமாளித்து விடுவேன்.
இப்போதெல்லாம், சின்ன சின்ன விஷயத்திற்கு கூட, மனைவிக்கு சம உரிமை அளிப்பதால், நான் எதைச் சொன்னாலும், ஓ.கே., சொல்லி விடுகிறாள். அதனால், எங்களுக்குள் சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை. 
தற்போது, மனைவி போற்றும் கணவனாக மட்டுமில்லை, மாமனார், மாமியார் மெச்சும் மருமகனாகவே மாறி விட்டேன்.
— வீ.சுரேந்திரன், காரைக்குடி.

இளநீர் குடிக்கச் செல்கிறீர்களா?





இது கோடை காலம்! நம்மில் பலர், இளநீர் கடையை நோக்கி படையெடுக்கிறோம். வெயில் கொடுமையும், தண்ணீர் தாகமும் சேர்ந்து, நம் கண்கள் இளநீரையே வட்டமிடுவதால், அதை குடிப்பதற்கு கொடுக்கும் ஸ்டிராவை கவனிப்பதில்லை.
நாம் குடித்து விட்டு தூர எறியும் ஸ்டிராக்களை, இளநீர் வியாபாரிகள் எடுத்து, தண்ணீரில் கழுவாமல், வெயிலில் காய வைத்து, மீண்டும் உபயோகிக்கின்றனர். இதனால், அந்த ஸ்டிராவின் மூலம் பலவிதமான நோய் பரவ வாய்ப்புண்டு. எனவே, இளநீர் பருகியவுடன், அந்த ஸ்டிராவை மறுமுறை உபயோகிக்க முடியாத அளவிற்கு முறுக்கியோ அல்லது முறித்தோ போட்டு விடுங்கள்.
இப்படி செய்வதால், நம் எச்சிலை பிறர் சாப்பிட வேண்டியதில்லை. அத்துடன் நோய் பரவாமலும் தடுக்கலாம்.
— எஸ்.வினோதினி, சென்னை.

அடகு கடை பித்தலாட்டங்கள்!





என் கணவர், என்னுடைய ஒரு பவுன் தங்கச் செயினை, சில மாதங்களுக்கு முன், அடகு வைத்திருந்தார். அது மிகச் சரியாக, ஒரு பவுன் - அதாவது, எட்டு கிராம் இருந்தது. ஆனால், அடகு வைத்த ரசீதில், 7.900 மில்லி கிராம் என்று எழுதியிருக்க, கணவரிடம் விசாரித்தேன். "அடகு கடைக்காரர்கள் சேதாரத்தை கழித்து விட்டுதான் எழுதுவார்களாம்; நானும் விசாரித்தேன்...' என்றார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது விட்டு விட்டோம்.
சமீபத்தில் மீண்டும் பணப் பற்றாக்குறை ஏற்பட, அந்த செயினை மீட்டு, வேறு பிரபலமான, அடகு நகை வங்கியில், அதிக தொகைக்கும், குறைந்த வட்டிக்கும் வைத்தோம். அப்போது தான், அந்த அதிர்ச்சி தெரிய வந்தது. ஏற்கனவே, 100 மில்லி கிராம் குறைத்து எழுதியதோடல்லாமல், பிரபலமான அந்த வங்கியின் கம்ப்யூட்டர் தராசில் எடை போட, 7.700 மில்லி தான் இருந்தது. பித்தலாட்டத்தை விசாரித்த போது, ஏற்கனவே அடகு வைத்த நகைக்கடையின் கைவரிசை புரிந்தது. கோபப்பட்டு, அந்த கடையில் விசாரித்ததற்கு, "நகையை மீட்கும் போதே, எடை போட்டு விட்டு போக வேண்டியது தானே ...' என்று கூலாக பதில் சொல்ல, ஆடிப் போனோம்.
மிடில் கிளாஸ் மக்களே... தங்க நகை அடகு வைக்கும்போது, ஏரியாக்களில் புற்றீசல் போல் முளைத்துவிட்ட அடகு நகை கடைக்காரர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருங்கள். எங்களைப் போல் ஏமாறாதீர்கள்.
— பி.ஜெயலட்சுமி, திருப்பூர்.

சென்னையை தவிர மற்ற பகுதிகளில் 16மணி நேரம் மின்வெட்டு...

கோடைகாலம் துவங்கியதால், மின் தேவை அதிகரிக்கும் நிலையில், வறட்சி காரணமாக மின் உற்பத்தியும் பாதித்ததால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை நேற்று, 2,923 மெகா வாட் ஆக உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுவதுடன், தொழிற்சாலைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், 2008 மார்ச் மாதம் முதல், தமிழகத்தில் மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. மின் பற்றாக்குறையால், 2008 செப்., 1 முதல் மின்தடை நடைமுறைக்கு வந்தது. இம்மாதம் 13ம் தேதி, 11,132 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் தேவை கடந்த, 20ம் தேதி 11,515 ஆகவும், நேற்று காலை, 11,736 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. ஒரு வாரத்தில் மின் தேவை, 600 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது. தமிழக அனல் மின் நிலையங்கள் மூலம், 2,655 மெகா வாட், நீர் மின் நிலையங்களில், 663 மெகா வாட், மத்திய மின் தொகுப்பில் இருந்து, 2,243 மெகா வாட் மற்றும் தனியார், மரபுசாரா மின் உற்பத்தி மூலம், 8,813 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது.
பற்றாக்குறை: இம்மாதம் 13ம் தேதி, 2,198 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் பற்றாக்குறை, கடந்த, 20ம் தேதி 2,865 ஆகவும், நேற்று காலை, 2,923 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. இதனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தினமும் சராசரியாக, 14 மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. அதிகரிக்கும் மின் தடையால் தினமும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக உற்பத்தி முடங்குகிறது. பின்னலாடை நகரமான திருப்பூரில், காலை, 6:00 மணி முதல், 9:00 
மணி வரையும், மதியம், 12:00 முதல், 4:00 மணி வரையிலும், மாலை 6:00 மணிக்கு மேல் இரவு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என, அதிகபட்சம், 14 மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன் மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், 420 மெகா வாட், வல்லூரில், 360 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டது. இரு யூனிட்களிலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் காற்றாலை உற்பத்தி "பூஜ்யம்': மொத்தம் 7,130 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட, காற்றாலைகள் மூலம், சில நாட்களாக சராசரியாக, 100 முதல், 200 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. நேற்று காலை காற்றின் வேகமும் குறைந்து விட்டதால், காற்றாலைகள் மின் உற்பத்தி பூஜ்யமாகி விட்டது. முன்அறிவிப்பு இன்றி திடீர், திடீரென மின்தடை செய்வதால், வீடுகளில் குறித்த நேரத்தில் சமையல், இயந்திரத்தில் துணி துவைப்பது போன்ற பணிகளை முடிக்க இயலாமல், இல்லத்தரசிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். மின் தடையை சமாளிக்க பலர் வீடுகளில் 
இன்வெர்ட்டர் பொருத்தியுள்ளனர். இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் ஆவதற்கு, ஐந்து மணிநேரம் தேவை. தொடர்ந்து ஐந்து மணிநேரம் கூட மின் வினியோகம் இல்லாததால், இன்வெர்ட்டர் பொருத்தியவர்களும் அவதிப்படுகின்றனர். ஒரே ஆண்டில் டீசல் லிட்டருக்கு, எட்டு ரூபாய் விலை உயர்ந்துள்ளது தொழிற்சாலைகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் அவதி: பிளஸ் 2 தேர்வு முடிவடையும் நிலையில், இம்மாதம் 27ம் தேதி முதல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்தடை செய்வதால், மாணவ, மாணவியர் இரவு நேரத்தில் படிக்க முடியாமல், மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

ஜூலையில் உலகமெங்கும் கோச்சடையான்!

இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள முதல் படம் கோச்சடையான். இந்தியாவில் முதல் 3டி படமான இப்படம் மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது.

 இதில் ரஜினியுடன், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வருகிற மே மாதம் வெளியாகிறது. அதையடுத்து படத்தை ஜூலை மாதத்தில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான் என 5 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் பல முக்கிய ஏரியாக்களுக்கு விற்பனையாகி விட்டது. இந்நிலையில், கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமையும் தற்போது விற்பனையாகியுள்ளது.

 மேலும் தெலுங்கில் விக்ரம சிங்ஹா என்ற பெயரில் வெளியாகும் கோச்சடையான் படத்தின் உரிமையை கணபதி பிலிம்ஸ் வாங்கியுள்ளதாம்.

Friday, 22 March 2013

ஸ்கூட்டருக்கு "ஏகே-47' பதிவு எண் பெற ரூ.7 லட்சம் செலுத்திய விவசாயி


 பஞ்சாபில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், அம்மாநிலத்தவர்களுக்கு, "ஏகே-47' மீதுள்ள மோகம் குறைந்தபாடில்லை. ஸ்கூட்டருக்கு, ஏகே - 47 என்ற பதிவு எண்ணை வாங்குவதற்காக, அம்மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி, ஏழு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

"அவ்டோமேட் கலாஸ்நிகோவ்' என்ற, ரஷ்ய நாட்டவர் கண்டுபிடித்த, துப்பாக்கிக்கு, அவர் பெயரையே சுருக்கி, ஏகே-47 என்ற பெயர் வழங்கப்பட்டது. அந்த கால கட்டத்திலும், இப்போதும், இது புகழ் பெற்று விளங்குகிறது. பஞ்சாபில், பயங்கரவாதம் தலை விரித்தாடிய காலங்களில், இந்த ரக துப்பாக்கிகளைத் தான் பயங்கரவாதிகள் அதிகம் பயன்படுத்தினர். பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர், குல்பீர்; விவசாயி, சமீபத்தில், "ஆக்டிவா' ஸ்கூட்டர் ஒன்றை, 53 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். இதற்கு, ஏகே-47 என்ற, வாகன பதிவு எண்ணை வாங்க ஆசைப்பட்டார். ஆனால், அதே எண்ணைப் பெற, வேறு பலரும் போட்டி போட்டனர். அதனால், அந்த பதிவு எண்ணை ஏலத்தில் விட, ஹோஷியார்பூர் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். ஏலத்தில், 16 பேர் பங்கேற்றனர். இறுதியில், "பிபி-07,ஏகே-47' என்ற பதிவு எண்ணை, 7 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார் குல்பீர்.

ஏலத்தில் வெற்றி பெற்ற, விவசாயி குல்பீர் கூறியதாவது: இத்தாலியில் வசிக்கும் என் சகோதரரும், அமெரிக்காவில் வசிக்கும் என் உறவினரும், "எவ்வளவு விலை கொடுத்தாவது, இந்த பதிவு எண்ணை வாங்கி விடுங்கள்' என, உற்சாகம் அளித்தனர். 13 லட்சம் ரூபாய் வரை, ஏலம் போயிருந்தால் கூட, அந்த எண்ணை நான் வாங்கியிருப்பேன். இந்த எண் மிகவும் பிரபலமானது மற்றும் தனித்தன்மை வாய்ந்தது. ஏற்கனவே, என்னிடம் உள்ள இரண்டு வாகனங்களின் பதிவு எண் - 47 என, உள்ளது. இருந்தாலும், ஏகே-47க்காக, என்ன விலை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருந்தோம். என்னிடம், "ஸ்கோடா லாரா' கார் தற்போது உள்ளது. விரைவில், "டொயோட்டா' நிறுவன தயாரிப்பான, "பார்சூனர்' கார் வாங்க உள்ளேன். அந்த காருக்கு, இந்த பதிவு எண்ணை மாற்றுவேன். இவ்வாறு குல்பீர் கூறினார். பதிவு எண்ணுக்கான ஏலத்தில், குல்பீர் வெற்றி பெற்றதும், அவரது மனைவியும், மகள்களும் அண்டை வீடுகளில் வசிப்போருக்கு, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

"புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!


" நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.
ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, "குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே' என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் கிராமப்புறங்களில், 20 சதவீதம், நகர்ப்புறங்களில், 12.8 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வே தெரிவிக்கிறது. இதே வேகம் நீடித்தால், "இனிவரும் காலங்களில், புகையிலை தொடர்பான நோய்களால், 2020ல், இந்தியாவில், 20 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும்' என்ற, அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது.
இது குறித்து, புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மாநில ஆலோசகர் பிரசன்னா கண்ணன் கூறும்போது, ""புகையிலை பொருட்களான சிகரெட், பான்பராக், குட்கா போன்றவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த 2008ல், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தது. ஆனால், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, இன்று வரை குறையவில்லை. இதற்கு மக்களிடையே புகையிலை குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணம். தற்போது, புகையிலை நோய்களால், இந்தியாவில், 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என்றார்.

புகை பிடிக்கும் பெண்கள்:
சென்னை நகரில், "கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது' என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,

கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’- ராஜபக்சேவின் புதிய கண்டுபிடிப்பு


இந்தியா- இலங்கை உறவு ஒருபோதும் குறையாது என்றும் , இந்தியா நம்மை விட்டு விலகிப்போகாது என்றும் இது தொடர்பான சூழ்ச்சிக்கு நாம் அச்சப்படத்தேவையில்லை என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் இந்த பேச்சில் ஒரு பழமொழியை கோடிட்டு காட்டினார். அதாவது ; பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள் என்றார். இந்த பழமொழியில் சஸ்பென்சை வைத்தார். இது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை.
இவரது லங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:


‘ இந்தியா-இலங்கை உறவு குறையாது’-

எங்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியா, இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.இது தொடர்பாக நாம் ஒருபோதும் அச்சமடைய தேவையில்லை. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவு ஒருபோதும் குறையப் போவதில்லை. இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க என்னை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். 
நமது கட்சி பயங்கரவாதத்தை இல்லாமல் அழித்துள்ளது. ‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’. பிளவடைந்திருந்த நாட்டை ஒரே தேசமாக மாற்றியுள்ளோம். பொய்களுக்கு வதந்திகளுக்கு பெருமளவு சக்தி காணப்படுகின்றது.எனினும் இதனை வெற்றி கொள்ள கட்சி என்ற ரீதியில் எங்களால் முடியும். கட்சியை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தல எப்பவும் தல தான்...


மன்னிக்கறதே வாடிக்கையா போச்சு இந்த அஜீத்துக்கு! ஆமாம்... தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் வலை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஒரு காலத்தில் அஜீத்தின் பரமActor Ajithவைரி. (அப்படீன்னா எதிரின்னு அர்த்தங்ணா..) பசையுள்ள நேரத்தில் 'பார்ப்போம் ஒரு கை' என்று அஜீத்திடம் மல்லுக்கு நின்ற ஏ.எம்.ரத்னம் அதன்பின் சரண்டர் ஆனது எப்போது தெரியுமா? இதே அஜீத்தே ரத்னத்திற்கு வலிய வந்து கால்ஷீட் கொடுத்தபோதுதான். 'எல்லாம் சாய்ராம் செயல்' என்று ஆபிஸ் வாசலிலேயே சாய்பாபா கோவிலை கட்டிவிட்டார் ரத்னம். அந்தளவுக்கு கடனிலிருந்து இவரை மீட்டார்கள் கண்ணுக்கு தெரியாத சாய்ராமும், கண்ணுக்கு தெரிந்த அஜீத்தும்.
இதோ- மறுபடியும் அஜீத்தின் மன்னிப்பு படலம் தொடர்கிறது.
தோள் கொடுக்கும் தோழனாக ஒரு காலத்தில் அஜீத்தின் அருகிலேயே இருந்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு இப்போது மீண்டும் நட்பு கரம் நீட்டியிருக்கிறாராம் அஜீத். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்று இருவருமே கசப்பு காலங்களை எரேஸ் பண்ணியது இன்டஸ்ட்ரியே மகிழ வேண்டிய சங்கதி.
சக்கரவர்த்தி கஷ்டத்திலிருக்காரு. அவருக்கு நான் உதவணும். அதனால் நம்ம இணைந்து தரப்போற படத்தை அவர் பேனர்ல பண்ணினால் என்ன என்றாராம் முருகதாசிடம் அஜீத். முதல் கட்ட பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆகியிருக்கிறது.
இன்னொரு கோவிலுக்கு அஸ்திவாரம் தோண்டுங்கண்ணே... சாய்ராம்!

திருமலையில் இலவச தரிசனத்தில் மாற்றம்: கூண்டுக்குள் இனி அடைய தேவையில்லை


திருமலையில், இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், இனிமேல் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. வைகுண்டம்-2, வளாகத்திற்குள் நுழைந்ததும், அவர்களுக்கு தரிசன நேரத்துடன் அடையாள அட்டை வழங்கப்படும். கூண்டுக்குள் அடைந்து கிடக்காமல், வெளியே சென்றுவிட்டு, தரிசன நேரத்திற்கு வரும் வகையில், புதுவசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வைகுண்டம்: திருமலையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்ல, வைகுண்டம் - 1, 2 வளாகங்கள் உள்ளன. இதில், வைகுண்டம்-1 வளாகம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபடுவதால், பலவித தவறுகள் நடக்கின்றன. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் நடந்து வரும் முறைகேட்டால், முறையாக வரும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தேவஸ்தானத்திற்கு ஏற்படும் அவப்பெயரை களைய, ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சேவா தொண்டர்களாக வரும் பக்தர்களை கொண்டு, ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மொட்டை: என்ன தான் மாற்றம் கொண்டு வந்தாலும், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்காக இரண்டு, மூன்று நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொட்டை போடுவதற்கு, குளிப்பதற்கு என, நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதை தவிர்த்து, இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில், வெளியில் சென்று மொட்டை அடிப்பது உட்பட, பிற பணிகளை முடிக்கும் வகையில், புது திட்டம் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கைரேகை: திருமலையில், வைகுண்டம்-2 காம்பளக்சில், இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு, அவர்களது புகைப்படம் மற்றும் கைரேகை பதித்த அடையாள அட்டைகள் வழங்கபடுகின்றன. இதில் தரிசனம் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். வெளியில் சென்று விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் வைகுண்டம்-2 வளாகம் வந்தால், சிறிது நேரத்தில் தரிசனம் முடிந்துவிடலாம். வெளியில் செல்லாமல், கூண்டுக்குள் காத்திருக்க பக்தர்கள் விரும்பினால், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
வி.ஐ.பி., தரிசனம்: வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக விண்ணப்பிக்கும் சிலர், தரிசன நேரத்தின் போது, அவர்கள் வராமல் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வருகின்றனர். இனி வி.ஐ.பி.,க்களுடன் இணைந்து, குடும்பத்தினரும், உறவினர்களும் வந்தால் மட்டுமே, தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போல், வி.ஐ.பி.,க்களும், வி.ஐ.பி., சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களும், தவறாமல் தங்களது அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; வழக்கு எண், விஸ்வரூபம், பரதேசி படங்களுக்கு விருதுகள்!

இந்திய அளவில், சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்படங்களுக்கு, ஐந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த, 2012ம் ஆண்டில் வெளியான, சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகளை, பாசு சட்டர்ஜி தலைமையிலான, தேசிய திரைப்பட தேர்வுக் குழுவினர் அறிவித்தனர்.

சிறந்த நடிகர்:
 சிறந்த திரைப்படமாக, இந்தி படமான, "பான் சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதுக்கு, இந்த படத்தில் நடித்த, இந்தி நடிகர், இர்பானும்; மராத்தி மொழியில், "அனுமாதி என்ற படத்தில் நடித்த, விக்ரம் கோகலேவும், தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சிறந்த நடிகை:
 சிறந்த நடிகையாக, "தாக் என்ற, மராத்தி மொழி படத்தில் நடித்த, உஷா ஜாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக, மராத்தி இயக்குனரான, சிவாதி லோடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

துணை நடிகை:
 சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு, "விக்கி டோனர் என்ற இந்தி மொழி படத்தில் நடித்த, டோலி அலுவாலியாவும், மலையாள நடிகை, கல்பனாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சிறந்த பாடகர்கள்: சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுக்கு, "சிட்டகாங் படத்தில் பாடிய, சங்கர் மகாதேவனும், சிறந்த பின்னணி பாடகிக்கான விருதுக்கு, மராத்தி பாடகி, ஷமிதாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது, "கஹானி படத்துக்காக, சுஜோய் கோஷூக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருதுக்கு, நம்ரதா ராவ், தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுற்றுச்சூழலை வலியுறுத்தும் படத்துக்கான சிறந்த விருது, "பிளாக் பாரஸ்ட் என்ற, மலையாள படத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்துக்கான சிறந்த விருது, தனிச்சல்லஞ்சன் என்ற, மலையாள படத்துக்கும் கிடைத்துள்ளது.

சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதுக்கு, மராத்தி இசைஅமைப்பாளர், ஷைலேந்திர பார்வேயும், சிறந்த பின்னணி இசை அமைப்பாளருக்கான விருதுக்கு, மலையாளத்தின் பிஜி பாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் படங்கள்
விஸ்வரூபத்துக்கு இரண்டு விருதுகள் : தமிழ் திரைப்படங்களுக்கு, ஐந்து தேசிய விருதுகள் கிடைத்து உள்ளன. கமல்ஹாசனின், "விஸ்வரூபம் படத்துக்கு, நடனம் அமைத்த, பிர்ஜு மஹராஜுக்கு, சிறந்த நடன இயக்குனர் விருது கிடைத்துள்ளது. இந்த படத்தின், கலை இயக்குனர்களாக பணியாற்றிய, லால்குடி என். இளையராஜா, பொன்டவி தாவிபசாஸ் ஆகியோர், சிறந்த கலை இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு எண் 18/9 : பாலாஜி சக்திவேல் இயக்கிய, "வழக்கு எண் 18/9 என்ற படத்துக்கு, ஒப்பனை கலைஞராக பணியாற்றிய, ராஜா, சிறந்த ஒப்பனை கலைஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படம், தமிழில், சிறந்த மாநில மொழி படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
பரதேசி : சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான விருதுக்கு, "பரதேசி படத்திற்கு பணியாற்றிய, பூர்ணிமா ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாலாஜி சக்திவேல் மகிழ்ச்சி: "வழக்கு எண் 18/9 பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறியதாவது:கதையை வடிவமைத்தபோதே, இது வர்த்த ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும், அதே நேரம் விருதும் கிடைக்க வேண்டும் என, நினைத்தேன். மாநில மொழி படத்திற்கான விருது, கிடைத்ததில் சந்தோஷம். ஒப்பனை கலைஞர் ராஜாவுக்கும், விருது கிடைத்துள்ளது, சந்தோஷத்தை அதிகப்படுத்தி உள்ளது. இவ்வாறு, பாலாஜிசக்திவேல் கூறினார்.
பூர்ணிமா நெகிழ்ச்சி: "பரதேசி படத்திற்கு, ஆடை வடிவமைப்பு செய்த, பூர்ணிமா ராமசாமி கூறியதாவது: இயக்குனர் பாலா, கதையை கூறி, தேவையான ஆடைகளை தயார் செய்யும்படி கூறியபோது, புதிய ஆடைகளை, பழைய ஆடைகளாக மாற்றினேன். பழைய ஆடைகளையும் வாங்கி வந்தேன். வேலை சிரமாக இருந்தாலும், ஆர்வத்துடன் செய்தேன். பாலா பாராட்டினார். தற்போது, மத்திய அரசும், பாராட்டி, விருது அளித்துள்ளது. இவ்வாறு, பூர்ணிமா ராமசாமி கூறினார்.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தில் அனுஷ்கா சர்மா?

"ஜுராசிக் பார்க், சின்ட்லர்ஸ் லிஸ்ட் உள்ளிட்ட, பிரமாண்ட படங்களை இயக்கி, ஹாலிவுட்டை வியக்க வைத்தவர், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவர், அடுத்ததாக, இந்தியா-பாக்., பிரச்னையை மையமாக வைத்து, ஒரு படத்தை இயக்கப் போகிறார்.இதற்காக, லொகேஷன் பார்ப்பதற்காகவும், மற்ற பணிகளுக்காகவும், சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். இதை மையமாக வைத்து, பாலிவுட்டில் பல தகவல்கள் உலா வருகின்றன.

தன் புதிய படத்துக்கு, நடிகர்களை தேர்வு செய்வதற்காக தான், ஸ்பீல்பெர்க் இந்தியா வந்ததாகவும், அதில், பாலிவுட்டின் சில முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும், "பாட்டியாலா ஹவுஸ், ஜாப் டக் ஹை ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்து, பாலிவுட் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள, அனுஷ்கா சர்மாவை, தன் படத்தில், ஹீரோயினாக, ஸ்பீல்பெர்க் புக் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்காவிடம் இதுகுறித்து கேட்டால், வாய் திறக்க மறுக்கிறார். மவுனம், சம்மதத்துக்கு அறிகுறியா...?