கோடைகாலம் துவங்கியதால், மின் தேவை அதிகரிக்கும் நிலையில், வறட்சி காரணமாக மின் உற்பத்தியும் பாதித்ததால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை நேற்று, 2,923 மெகா வாட் ஆக உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுவதுடன், தொழிற்சாலைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், 2008 மார்ச் மாதம் முதல், தமிழகத்தில் மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. மின் பற்றாக்குறையால், 2008 செப்., 1 முதல் மின்தடை நடைமுறைக்கு வந்தது. இம்மாதம் 13ம் தேதி, 11,132 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் தேவை கடந்த, 20ம் தேதி 11,515 ஆகவும், நேற்று காலை, 11,736 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. ஒரு வாரத்தில் மின் தேவை, 600 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது. தமிழக அனல் மின் நிலையங்கள் மூலம், 2,655 மெகா வாட், நீர் மின் நிலையங்களில், 663 மெகா வாட், மத்திய மின் தொகுப்பில் இருந்து, 2,243 மெகா வாட் மற்றும் தனியார், மரபுசாரா மின் உற்பத்தி மூலம், 8,813 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது.
பற்றாக்குறை: இம்மாதம் 13ம் தேதி, 2,198 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் பற்றாக்குறை, கடந்த, 20ம் தேதி 2,865 ஆகவும், நேற்று காலை, 2,923 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. இதனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தினமும் சராசரியாக, 14 மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. அதிகரிக்கும் மின் தடையால் தினமும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக உற்பத்தி முடங்குகிறது. பின்னலாடை நகரமான திருப்பூரில், காலை, 6:00 மணி முதல், 9:00
மணி வரையும், மதியம், 12:00 முதல், 4:00 மணி வரையிலும், மாலை 6:00 மணிக்கு மேல் இரவு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என, அதிகபட்சம், 14 மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன் மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், 420 மெகா வாட், வல்லூரில், 360 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டது. இரு யூனிட்களிலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் காற்றாலை உற்பத்தி "பூஜ்யம்': மொத்தம் 7,130 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட, காற்றாலைகள் மூலம், சில நாட்களாக சராசரியாக, 100 முதல், 200 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. நேற்று காலை காற்றின் வேகமும் குறைந்து விட்டதால், காற்றாலைகள் மின் உற்பத்தி பூஜ்யமாகி விட்டது. முன்அறிவிப்பு இன்றி திடீர், திடீரென மின்தடை செய்வதால், வீடுகளில் குறித்த நேரத்தில் சமையல், இயந்திரத்தில் துணி துவைப்பது போன்ற பணிகளை முடிக்க இயலாமல், இல்லத்தரசிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். மின் தடையை சமாளிக்க பலர் வீடுகளில்
இன்வெர்ட்டர் பொருத்தியுள்ளனர். இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் ஆவதற்கு, ஐந்து மணிநேரம் தேவை. தொடர்ந்து ஐந்து மணிநேரம் கூட மின் வினியோகம் இல்லாததால், இன்வெர்ட்டர் பொருத்தியவர்களும் அவதிப்படுகின்றனர். ஒரே ஆண்டில் டீசல் லிட்டருக்கு, எட்டு ரூபாய் விலை உயர்ந்துள்ளது தொழிற்சாலைகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் அவதி: பிளஸ் 2 தேர்வு முடிவடையும் நிலையில், இம்மாதம் 27ம் தேதி முதல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்தடை செய்வதால், மாணவ, மாணவியர் இரவு நேரத்தில் படிக்க முடியாமல், மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.